ஒடிசாவில் 5வது முறை நவீன் பட்நாயக் ஆட்சி! கருத்து கணிப்புகளில் தகவல்!!

ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அங்கு மொத்தம் 147 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பிஜு ஜனதா தளம் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை சம்பாத்-கனாக் நியூஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் பிஜேடி 6 முதல் 9 இடங்களையும், பாஜக 8 முதல் 12 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ்-வி.எம்.ஆர் வெளியிட்ட கணிப்பில் பா.ஜ.க. 12 இடங்களையும், பிஜேடி 8 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை பிடித்தாலும் சட்டசபைத் தேர்தலில் பிஜேடி கட்சியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிப்புகளில் கூறப்பட்டிருக்கிது.

சம்பாத்-கனாக் நியூஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் பிஜேடி 85 முதல் 95 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க. 25 முதல் 34 தொகுதிகளையும், காங்கிரஸ் 12 தொகுதியையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இதே போல்தான் மற்ற கணிப்புகளும் பிஜேடி கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக், ஒடிசாவில் 2 முறை முதலமைச்சராக இருந்தார். மத்திய சுரங்கத்துறை அமைச்சராகவும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளார். நவீன்பட்நாயக் ஏற்கனவே வாஜ்பாய் அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். அதன்பின், 2000ம் ஆண்டில் ஒடிசா முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ச்சியாக 4 முறை ஆட்சியைப் பிடித்த நவீன் இப்போது 5 வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.

நவீன் மிகவும் எளிமையாக இருப்பவர். மேலும், அங்கு ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. பா.ஜ.க. கடந்த 5 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வந்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தைப் போல் இம்மாநிலத்திலும் பா.ஜ.க. முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்தியாவில் சிக்கிம் மாநில முதல்வரான பவன் சாம்ளிங், 26 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறார். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். தற்போது மூன்றாவது இடத்தில் நவீன் 20 ஆண்டுகளை கடந்த ஆட்சியில் நீடிக்கிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி! கருத்துகணிப்புகள் பொய்யானது!!
More News >>