இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு .. கமலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் கிடைத்தது!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசி சர்ச்சையில் சிக்கிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது. கமலுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பினர். தேர்தல் பிரச்சாரத்திலும் கமலுக்கு எதிராக செருப்பு வீச்சு சம்பவங்களும் அரங்கேறியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மதத்தினை இழுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த வாரம் நடைபெற்றது. விசாரணையின் போது காரசார விவாதம் நடந்தது. கமலின் பேச்சு குறித்து நீதிபதிகளும், கோட்சேவுக்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் நிபந்தனையுடன் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். இதனால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து கமலுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.

இந்து என்ற நாமகரணம் எப்போது வந்தது தெரியுமா..? மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கமல்!
More News >>