கணிப்புகள் எல்லாம் பொய்! எதிர்க்கட்சிகள் கடும் கோபம்!!
டி.வி. சேனல்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியானதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். கணிப்புகள் எப்போதுமே தவறாக இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே பிரபல சேனல்கள் எல்லாமே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன. பெரும்பாலும் எல்லா சேனலுமே பா.ஜ.க. அணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 272ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. நியூஸ் எக்ஸ் மட்டுமே பா.ஜ.க.வுக்கு 242 மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்ட ட்விட்டில், ‘‘கணிப்புகள் என்று வெளியிடப்படும் யூகங்கள் எல்லாமே தவறானவை. இப்படி வெளியிட்டு திரைமறைவில் ஆயிரக்கணக்கான வாக்கு எந்திரங்களை மாற்றி, பா.ஜ.க. வெற்றி பெற சூழ்ச்சி செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எல்லோரும் இப்போதுதான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் வெளியிட்ட ட்விட்டில், ‘‘கணிப்புகள் எப்போதுமே தவறாக அமைந்திருக்கின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் தேர்தல் முடிந்ததும் வெளியான 52 கணிப்புகளுமே பொய்யாகி, ஆளும்கட்சி வென்றுள்ளது. இந்தியாவில் பொதுவாகவே மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக சொல்வதற்கு பயப்படுவார்கள். ஆளும்கட்சிக்காரர்கள்தான் தங்களிடம் கருத்து கேட்கிறார்களோ என்று பயப்படுவா்கள். எனவே, உண்மையான முடிவுகளுக்கு மே23 வரை காத்திருப்போம்’’ என்று கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு, ‘‘கணிப்புகள் எல்லாம் தவறானவை, ஆந்திராவில் மீண்டும் தெலுங்குதேசம் கட்சியே ஆட்சி அமைக்கும். மத்தியில் பா.ஜ.க. அல்லாத ஆட்சிதான் நிச்சயம் பொறுப்பேற்கும்’’ என்று கூறியிருக்கிறார். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ‘‘கணிப்புகள் எல்லாமே தவறு. டி.வி.யை ஆப் செய்து, சமூக ஊடகங்களை பார்க்காமல் இருக்க வேண்டிய நேரம் இது. பூமி உருண்டை அதே அச்சில்தான் சுற்றுகிறதா என்று 23ம் தேதி பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
ஒடிசாவில் 5வது முறை நவீன் பட்நாயக் ஆட்சி! கருத்து கணிப்புகளில் தகவல்!!