கருத்துக் கணிப்புகள் பொய்யாகிவிடும்... அதிமுக அமோக வெற்றி பெறும்...! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்பு என்பது வெறும் கருத்துத் திணிப்பு தான் என்றும் அது பொய்த்துவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நாடுமுருவதும் மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகி பரபரப்பையும், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் தேசிய அளவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளிலுமே கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெரும் என்றும் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கருத்து கணிப்புகள் பொய்த்துப் போகும். 2016 சட்டப்பேரவை தேர்தலில் நான் தோற்பேன் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டனர். ஆனால், அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

தமிழகத் தேர்தல் முடிவு நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை, கருத்துத் திணிப்பாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தேசிய அளவில் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி, நாங்கள் தமிழக அளவில் தான் அரசியல் செய்கிறோம். தேசிய அளவில் கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்துக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவை இறுதிக் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு - 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஓட்டுப்பதிவு
More News >>