சென்னையில் மாதாந்திர பயணச்சீட்டு கட்டண உயர்வு இன்று முதல் அமல்
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்ததை அடுத்து, மாதாந்திர பயணச்சீட்டு கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை கடந்த மாதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனால், பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் என பலர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தில் சற்று குறைத்து தமிழக அரசு அறிவித்தது. பேருந்து கட்டணம் குறைத்தது வெறும் கண்துடைப்புக்கே என்றும், பேருந்து கட்டண உயர்வை திமழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், பேருந்தில் பயணிக்க மாதந்தோறும் வழங்கப்படும் பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதில், மாதாந்திர பயண சீசன் அட்டை ரூ.240ல் இருந்து ரூ.320 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், புதிய கட்டணம் பொருத்தப்பட்டுள்ள மாதாந்திர பயணச்சீட்டு அட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.1000 மாதாந்திர பயண சீசன் அட்டை கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.