அதிமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்! எடப்பாடிக்கு சிக்கல் ஆரம்பம்?

தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவுகிறது. மேலும், கருப்பணனை நீக்கி விட்டு, தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடிக்கு தோப்பு வெங்கடாசலம் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பெருந்துறையில் தனது வீட்டில் நிருபர்களை தோப்பு வெங்கடாசலம் சந்தித்தார். அப்போது, கே.சி.கருப்பணன் மீது புகார்களை அடுக்கினார். திருப்பூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக தானும் தொண்டர்களும் கடுமையாக உழைத்ததாகவும், கருப்பணனோ தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தற்போதைய சூழ்நிலை காரணமாக தான் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் மாவட்டச் செயலாளர் அல்லது மந்திரி பதவி தராவிட்டால், கட்சியை விட்டு அணி மாறுவேன் என்று மறைமுகமாக மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? பெரும்பான்மையை இழந்து ஆட்சி பறிபோகுமா என்ற சூழலில் தோப்பு வெங்கடாசலம் இப்போதே எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கிறார். எனவே, அ.தி.மு.க.வுக்கு ஏழெட்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றி கிடைக்காவிட்டால், இவரைப் போல் அதிருப்தியில் உள்ளவர்கள் எல்லோரும் கொடி பிடிப்பார்கள். அது எடப்பாடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான்! தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அமோகம்!!
More News >>