பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து ... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்கின்றனர்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். இதில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கை வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டி பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதால் பாஜக தரப்பில் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்தளிக்க பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ளார்.
டெல்லி அசோகா நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு நடைபெற உள்ள விருந்தில் பங் கேற்க வருமாறு தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் தலைவர்களுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தில் அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் இந்த விருந்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மத்தியில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் நாளை விருந்து நடைபெறும் நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.