நம்ம பிரதமருக்கு இந்த ஆதரவு மட்டும் போதுமா?
பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறதோ இல்லையோ, ட்விட்டரில் அதிரடியாகவே பெருகுகிறது ஆதரவு.
சர்வதேச அளவில் அதிக நாடுகளைச் சுற்றிய அரசியல் தலைவர், இந்தியப் பிரதமர்களிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த அரசியல்வாதி எனப் பல பட்டங்களைச் சுமக்கும் நமது பிரதமர் மோடி, ட்விட்டரில் அதிகமானோரால் பின்தொடரப்படுவோர் பட்டியலிலும் தற்போது முதலிடம் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய அரசியல் தலைவர்களிலேயே உலகத் தலைவர்களுக்கு சமமான 'ஃபாலோயர்கள்' கொண்ட மாபெரும் தலைவராகப் புதிய பொறுப்பேற்றுள்ளார் நமது பிரதமர் மோடி. ட்விட்டரில் பிரதமர் மோடியை சுமார் 4 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
பண்டிகைகளுக்கான வாழ்த்துச் செய்திகளிலிருந்து அரசு நலத்திட்டங்கள் வரை அத்தனையும் இந்திய அரசின் அரசாணையில் வெளிவரும் முன்னரே பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துவிடும்.
எந்தப் பக்கம் புகைப்படக் கேமிராவை வைத்தாலும் எத்தனைக் கேமிராக்கள் வைத்தாலும் அத்தனை லென்ஸ்களையும் அசாதாரணமாகத் தேடிச் சென்றடையும் நமது பிரதமர் மோடியின் கண்கள்.
இத்தகைய நுண்ணறிவாளரின் சிறு அசைவையும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விரும்பியே பிரதமரை ட்விட்டரில் அதிகமானோர் பின்தொடர்வதாக நம் நாட்டின் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.