சைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்!

பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற கருத்து கணிப்புகள் வரவே, டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், சைலன் மோடுக்கு போய் விட்டார்.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லை என்பது மட்டுமின்றி, மோடிக்கு எதிர்ப்பு அலையும் காணப்பட்டது. வடமாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இதனால், மூன்றாவது அணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க ஆளாளுக்கு பறந்தார்கள். குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் போட்டி போட்டு கொண்டு ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து பேசி வந்தனர்.

சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் சரி, வேறு ஆட்சி வந்தாலும் சரி, பா.ஜ.க.வுக்கு எதிராகவே நீடிப்பார். அந்த அளவுக்கு அவர் மோடியுடன் மோதி விட்டார். நாயுடு, மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் எந்த காலத்திலும் மோடிக்கு ஆதரவாக மாற வாய்ப்பில்லை. ஆனால், சந்திரசேகர ராவ் அப்படியில்லை. அவர் பா.ஜ.க. அணியில் இடம் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஏனெனில், தெலங்கானாவில் அவருக்கு முக்கிய எதிர்க்கட்சியே காங்கிரஸ் தான்.

இந்நிலையில், பா.ஜ.க. அணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கணிப்புகள் வரவே, தனது மூன்றாவது அணி கோஷத்தை சந்திரசேகர ராவ் கைவிட்டு விட்டார். நாயுடுவுக்கு போட்டியாக மம்தா, ஸ்டாலின் என்று பார்த்து வந்த அவர் நேற்று(மே20) வாயை மூடிக் கொண்டார். அவர் தனது கட்சியின் முக்கிய தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது கணிப்புகளில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 17ல் 13 தொகுதிகள் கிடைக்கும் என்பதை ஏற்கவில்லை என்றும் 16 இடங்கள் கைப்பற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், எந்த அணியில் சேருவது என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, மே 23ம் தேதி வரை மவுனமாக காத்திருக்க அவர் முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.

களமிறங்கிய சோனியா! ஆட்சியை பிடிக்க முடியுமா?
More News >>