வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடக்குமா?.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முடுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் 23-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக தரப்பு உற்சாகமானாலும், எதிர்க்கட்சிகள் இந்தக் கணிப்பை நம்பத் தயாராக இல்லை. அதே வேளையில் வாக்கு எண்ணிக்கையின் போது தில்லு முல்லு ஏதும் நடக்குமோ என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளிடையே வலுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மே.வங்க முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் , இன்று மாலை 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவைச் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர். அப்போது, வாக்கு எந்திரங்களை பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தவுள்ளனர். மேலும் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளையும், விவி பேட் ஒப்புகைச் சீட்டின் எண்ணிக்கையையும் 50% வரை சரி பார்க்க வேண்டும் என்பதையும் முறையிட உள்ளதாக தெரிகிறது.
சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இந்தப் புகாரை அளிக்கவுள்ளனர். மேலும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியால் கூடி மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது..! வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு..! ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை