எடப்பாடியை மிரட்டுகிறாரா தோப்பு வெங்கடாசலம்? மே 23க்குள் சமரசம் ஏற்படுமா?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது.
மேலும், கருப்பணனை நீக்கி விட்டு, தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடிக்கு தோப்பு வெங்கடாசலம் நெருக்கடி கொடுத்து வந்ததார். ஆனால், கருப்பணனிடம் இருந்து அமைச்சர் பதவி அல்லது மாவட்டச் செயலர் பதவியை பறித்து தோப்புவிற்கு தருவதற்கு முதலமைச்சர் எடப்பாடிக்கு எந்த தயக்கமும் இல்லை. கருப்பணனும் அப்படி ஒன்றும் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விடப் போவதில்லை.
ஆனால், அதன்பின்பு கட்சியில் ஏற்படும் விளைவுகளைப் பற்றித்தான் எடப்பாடி யோசிக்கிறார். அமைச்சரவையில் மாற்றம் செய்தாலே, தங்களுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்று பல எம்.எல்.ஏ.க்கள் கொடி பிடிப்பார்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாக மதுரையில் ராஜன்செல்லப்பா மந்திரி பதவி கேட்டு, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலரும் வாரியத் தலைவர் பதவி அல்லது கட்சிப் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால்தான், எந்த அமைச்சர் மீதும், மா.செ. மீதும் கைவைக்க எடப்பாடி தயங்கி வருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் கருப்பணனுக்கும், தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே மோதல் அதிகரித்து விட்டது. சமீபத்தில் பெருந்துறையில் தனது வீட்டில் நிருபர்களை தோப்பு வெங்கடாசலம் சந்தித்தார். அப்போது, கே.சி.கருப்பணன் மீது புகார்களை அடுக்கினார். திருப்பூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக தானும் தொண்டர்களும் கடுமையாக உழைத்ததாகவும், கருப்பணனோ தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். அது மட்டுமல்ல. கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்.சுக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தோப்புவை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தினார். முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசுமாறு கூறினார்.
இந்த நிலையில், மே 20ம் தேதி மாலை சேலம் வந்த தோப்பு வெங்கடாசலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை அளித்தார். மாலை 5 மணி முதல் ஒன்றரை மணி நேரம் அவரிடம் முதல்வர் எடப்பாடி சமரசம் பேசினார். அப்போது வைகைச்செல்வனும் உடனிருந்துள்ளார்.
பின்னர், தோப்புவெங்கடாசலம் புறப்படும் போது, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தலில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நான் இருந்தேன். ஜெயலலிதாவின் பிரசார வாகனம், என் வீட்டில்தான் ஒருவாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதிமுக தேர்தல் அறிக்கையைக் கூட எனது பெருந்துறை தொகுதியில்தான் ஜெயலலிதா வெளியிட்டார். அதே போல், அவர் பிரசாரத்திற்கு புறப்பட்ட போது, எனது மனைவிதான், ஆரத்தி எடுத்து அனுப்பினார். நான் கடுமையாக பாடுபட்டு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுக்கொடுத்தேன். வேறு எந்த மாவட்டத்திலும் அதிமுக மொத்த தொகுதிகளையும் கைப்பற்றவில்லை. ஆனால், இப்போது அதிமுகவில் எனக்கு அந்த நிலைமை இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலைகள் காரணமாகவே கட்சி பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளேன். இனிமேல், முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
ஆனால், கருப்பணன் ஆதரவாளர்களோ, தோப்பு வெங்கடாசலத்தின் மீது புகார்களை அடுக்குகின்றனர். ‘‘தோப்பு வெங்கடாசலம்தான் கடந்த 2006-11ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் என்.கே.கே.பி.ராஜாவுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவரது ஆட்கள்தான் அப்போது மணல் அள்ளி சம்பாதித்தனர். ஆனால், அவர் இப்போது அமைச்சர் கருப்பணனை குறை கூறுகிறார்’’ என்று அவர்கள் கூறினர்.இந்த நிலையில், தனக்கு மாவட்டச் செயலாளர் அல்லது மந்திரி பதவி தராவிட்டால், தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சியை விட்டு விலகி, அணி மாறுவேன் என்று முதலமைச்சரிடம் தோப்பு வெங்கடாசலம் நேரிடையாக கூறி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் ஏற்கனவே டிடிவி அணி மற்றும் தி.மு.க.வுக்கு ஆதரவாக சென்றவர்கள். இது தவிர தனியரசு தேர்தல் முடிவுக்கு ஏற்ப மாறக் கூடியவர். இந்நிலையில், நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது ஐந்தாறு இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றினால்தான், ஆட்சியில் நீடிக்க முடியும்.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? பெரும்பான்மையை இழந்து ஆட்சி பறிபோகுமா என்ற இந்த சூழலில் தோப்பு வெங்கடாசலம் இப்போதே எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கிறார். எனவே, அ.தி.மு.க.வுக்கு ஏழெட்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றி கிடைக்க வேண்டும். மேலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வர வேண்டும். இந்த இரண்டும் நடக்காவிட்டால், தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சிகள் எப்படியாவது ஆட்சியை அகற்ற முயற்சிக்கும். அப்போது தோப்புவைப் போல் அதிருப்தியில் உள்ளவர்கள் பலரும் எடப்பாடிக்கு எதிராக மாறலாம். அது எடப்பாடி அரசை கவிழ்க்கவும் செய்யலாம்.
கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்... ஓட்டு மிஷினை மாற்ற பாஜக திட்டம்... எச்சரிக்கும் மம்தா!