ஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சி? உ.பி.யில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! தேர்தல் ஆணையம் அவசர மறுப்பு!!
உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ம் தேதி நடைபெற உள்ளது. மே 19ம் தேதி கடைசி கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததுமே அவற்றுக்குமாக சேர்த்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சேனல்கள் ஒளிபரப்பின. அதில் எல்லா சேனலுமே பா.ஜ.க. அணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்கும் என்று இரண்டு நாள் முன்பு அமித்ஷா சொன்னதையே திருப்பிச் சொல்லவே, எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன.
இதையடுத்து, நாடு முழுவதும் ஓட்டு எந்திரங்களில் பா.ஜ.க. ஏதோ தில்லு wz முல்லு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தேகம் கிளப்பினர். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணையத்தில் இன்று(மே21) மாலை ஆணையர்களை சந்தித்து புகார் கூறவிருக்கின்றனர்.
இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில் சாகல்திகா தாலுகாவில் ஒரு ஓட்டலில் இருந்து 35 ஓட்டு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதே போல், சில இடங்களில் ஓட்டு எந்திரங்கள் எடுத்து செல்லப்படவே, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். காசிப்பூர், சந்தவுளி, தோமரியாகஞ்ச், ஜான்சி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடந்தது. காசிப்பூரில் சமாஜ்வாடி-பகுஜன் கூட்டணி வேட்பாளர் அப்சல் அன்சாரி தலைமையில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், சாகல்திகா தேர்தல் அதிகாரி நவ்னீத்சிங் சகால் கூறுகையில், ‘‘இந்த தாலுகாவில் நவீன்மண்டிஸ்தல் பகுதியி்ல் 35 பயன்படுத்தப்படாத ஓட்டு எந்திரங்களை ஞாயிறன்று கொண்டு செல்ல முடியவில்லை. அதனால்தான், திங்களன்று கொண்டு சென்றோம். ஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக கூறுவது தவறு’’ என்றார்.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், ‘‘ஓட்டு எந்திரம் மாற்றப்பட்டதாக கூறுவது அபத்தமானது. ஓட்டுப்பதிவு முடிந்ததுமே எல்லா கட்சிகளின் ஏஜென்டுகள் முன்பாக அவை சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமுக்குள் வைக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் வீடியோவும் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஓட்டு எந்திரங்களை மாற்றுவதாக சொல்வது தவறு’’ என்றனர்.
கருத்துக் கணிப்புகள் பொய்யாகிவிடும்... அதிமுக அமோக வெற்றி பெறும்...! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை