டெல்லியில் பாஜக விருந்து..! ஒரே விமானத்தில் பறந்த ஓபிஎஸ், இபிஎஸ்.!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்க அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றனர்.

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தரப்பு இப்போதே பெரும் உற்சாகத்தில் மிதக்கிறது. இதனால் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று இரவு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். விருந்துக்கு முன்னதாக, 23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விருந்து மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனையில் பங்கேற்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அதே விமானத்தில் அதிமுக அமைச்சர் தங்கமணி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர். தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்தும், எல்.கே சுதீசும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்.

டெல்லி செல்லுமுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம் என்றார். மத்திய அரசில் அதிமுக இடம்பெறுமா என்பது குறித்து கேட்டதற்கு, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பின்பு, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை..! திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
More News >>