தேர்தல் கமிஷனர்களை பாராட்டிய பிரணாப்! காங்கிரசை வெறுப்பேற்றுகிறாரா?

நாடாளுமன்றத் தேர்தலை, தேர்தல் ஆணையர்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழம்பெரும் காங்கிரஸ்காரரான பிரணாப் முகர்ஜி, பல்வேறு பதவிகளை வகித்தவர். கடைசியாக, ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த உயர்ந்தப் பதவியில் இருந்தார். பிறகு, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் நரேந்திரமோடியுடன் நல்ல நட்புறவு கொண்டார். அவரை தனது ஆசிரியராக பார்ப்பதாக மோடி கூறியிருக்கிறார்.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், முழுக்க, முழுக்க பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில், பிரணாப் முகர்ஜி திடீரென தேர்தல் கமிஷனை ஓஹோவென புகழ்ந்துள்ளார். அவர் இப்படி செய்தது திரிணாமுல் கட்சியை வெறுப்பேற்றவா, அல்லது காங்கிரசை வெறுப்பேற்றவா என்பது தெரியவில்லை. டெல்லியில் என்.டி.டி.வி.யை சேர்ந்த சோனியாசிங் என்பவரின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

வேலை தெரியாதவர்கள்தான், கருவிகளை குறை சொல்வார்கள். நல்ல வேலைக்காரர்கள் யாரையும் குறை சொல்ல மாட்டார்கள். அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், அவற்றின் செயல்பாடுகளை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் வெற்றி பெற்று வருகிறது என்றால், அதற்கு சுகுமார்சென் முதல் தற்போதுள்ள தேர்தல் ஆணையர்கள் வரை எல்லோரும் சிறப்பாக தேர்தல்களை நடத்தி வந்ததுதான். இப்போதுள்ள தேர்தல் ஆணையர்களும், தேர்தலை பெர்பெக்ட் ஆக நடத்தி முடித்துள்ளார்கள். இவ்வாறு பிரணாப் பேசியுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்!
More News >>