கருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்!
உலக அழகி..பாலிவுட் பிரபலம்.., அமிதாப் மருமகள்.. என பல்வேறு சிறப்புப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன், தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்காக நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை கிண்டலடிப்பதாக நினைத்து, ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் ஓபராய் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடிகர் சல்மான்கான் உள்ள புகைப்படத்தை, கருத்துக்கணிப்பு என்றும், தம்முடன் உள்ள புகைப்படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றும், கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா ராய் உள்ள புகைப்படத்தை தேர்தல் முடிவு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
விவேக் ஓபராயின் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதா? என்று கண்டனக் குரல் எழுப்பியதுடன் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தி நடிகர், நடிகைகள் எனப் பலரும் குரல் ஆவேமடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் அவரை கடுமையாகச் சாடினர்.
இந்த மீம்ஸ் விவகாரம் சர்ச்சையானது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த விவேக் ஓபராய், தாம் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஏற்கனவே யாரோ ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான இந்த மீம்ஸை பார்த்தவுடன் எனக்கே சிரிப்பு வந்து விட்டது.எதற்காக இதனை பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அரசியலாக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவு சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவது போன்றது என தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித் தது. மேலும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி விவேக் ஓபராய்க்கு ஆணையம் சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதையடுத்து தான் வெளியிட்ட ஐஸ்வர்யா ராய் குறித்த படத்தை விவேக் ஓபராய் தனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டு, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
அதில், நான் கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் மிகவும் பின்தங்கியநிலையில் இருக்கும் 2 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை பெற்றுக்கொடுத்திருக்கிறேன். நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் வெளியிட்ட ஒரு மீம்ஸ், ஒரு பெண்ணை பாதித்து எரிச்சலடைய வைத்திருந்தால்கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய டுவீட் நீக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி! கருத்துகணிப்புகள் பொய்யானது!!