ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்துக்கணும்..! அதிமுக ஏஜண்டுகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பாடம்..!
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முகவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று விட வேண்டும்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த சீல் பத்திரமாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், எண்ணப்பட்ட வாக்குகளின் கணக்கும் சரியாக உள்ளதா? என ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்தவுடன் முகவர்கள் குறித்து வைத்த கணக்கும், அதிகாரிகளின் கணக்கும் சரியா என உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கையில் மாற்றுக் கட்சியினர் தில்லு முல்லு செய்தாலோ, அவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் தில்லு முல்லு செய்தாலோ அதை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் அறிக்கையில் கூறியுள்ளனர்.
பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா விருந்து ... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்கின்றனர்!