அரவக்குறிச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்று..? குழப்பிய தேர்தல் அதிகாரிகள்!
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்குகள் எண்ணப்படும் அறைகளை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார். இரு அறைகளில் வாக்குகள் எண்ணிக்கை எப்படி நடத்த முடியும் என்று அதிருப்தி தெரிவித்தார்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு 2 அறைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோருக்கு இந்த அறைகள் போதுமானது அல்ல. அரங்கம் போன்ற பெரிய இடத்திற்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அவர் கோரிக்கையை ஏற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி, அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகளில் மட்டுமே எண்ணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் இதற்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. வாக்கு எண்ணிக்கை சுற்றுகளை அதிகரித்தால் முடிவுகள் வெளியாக 2 நாட்கள் கூட ஆகிவிடும். இதனால் வீண் சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வாக்கு எண்ணிக்கையை பெரிய ஹாலில் நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி 14 மேஜைகளில் 17 சுற்றுகளாகவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதற்காக விசாலமான அறை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு விறுவிறுப்பு - அரவக்குறிச்சியில் பதற்றம்!