ஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் இப்போது சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் நடைபெறலாம் என்று பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அபாயச்சங்கு ஊதியுள்ளதால் அச்சமடைந்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முதலில் சரிபார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக,தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக எம்பி கனிமொழி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் சந்திரா உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தலைவர்கள் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர்.

அப்போது வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு முதலில் வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டால், குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகள் அனைத்திலும், மொத்த வாக்கு ஒப்புகைச் சீட்டையும் வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பின்காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக மாதக் கணக்கில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுதொடர்பாக நாளை ஆலோசனை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதில் மோசடி நடந்து விடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

More News >>