ஊக்க மருந்து விவகாரம் தங்க மங்கை கோமதிக்கு சிக்கலோ சிக்கல்... இடைக்காலத் தடை!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.திருச்சி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோமதி, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில், தன்னுடைய விடாமுயற்சியால் இந்த சாதனையை எட்டினார்.

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனை படைத்த கோமதியை, தமிழகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. வறுமை நிலையில் எந்த உதவிகளும் இன்றி இந்த சாதனையைப் படைத்தேன் என்று கோமதி கூறியதால் அவருக்கு உதவிகளும் ஏராளமாகக் குவிந்தன பொது அமைப்புகள், நடிகர்கள், அரசியல் கட்சிகள், தமிழக அரசு என போட்டி போட்டு கோமதிக்கு ரூ.5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் என நிதி உதவிகளை வாரி வழங்கின.

இந்த நிலையில் தான் கோமதி ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.நேற்று இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கோமதி உடனடியாக மறுத்து விட்டார். அவர் கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில்தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இது பற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். இந்த தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள்.அதுபற்றி, என்னிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன். ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு என கோமதி மறுத்திருந்தார்.

ஆனால், தோகா போட்டியின்போது மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி யாகியுள்ளதாகவும், இதையடுத்து கோமதிக்கு தற்காலிக தடையை இந்திய தடகள சம்மேளனம் விதித்துள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்து 2-வது கட்டமாக நடைபெற உள்ள ஊக்க மருந்து சோதனையிலும் கோமதி ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்ததாகவும், ஆனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அந்த தகவலை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை எதற்காக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்பது புரியவில்லை என இந்திய தடகள சம்மேளன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிகாரியை தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

More News >>