ஸ்டெர்லைட் போராட்டம்.. துப்பாக்கி குண்டுக்கு இரையான 13 பேர்.! முதல் ஆண்டு நினைவு தினம்! தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மே-22, ..2018.. தூத்துக்குடி மக்களை பதறச் செய்த நாள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவி சுடுவது போல் கண்மூடித்தனமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13பேரின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது எனலாம்.

அந்த துயரமான சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரள்வர் என்பதால் போலீசும், மாவட்ட நிர்வாகமும் கெடுபிடி காட்டத் தொடங்கி, தடையுத்தரவும் போட்டு விட்டனர். அஞ்சலி செலுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டதால் தூத்துக்குடியில் ஒரு வித பதற்றமான சூழலில், பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் ஆங்காங்கே போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தூத்துக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் ஒரு வித பதற்றமான சூழலில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

More News >>