தமிழகத்தில் யார் முந்துகிறார்கள்? நாளை காலை 9 மணிக்கு தெரியும்!
தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டன.
இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 45 மையங்களி்ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
அதன்படி, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து 14 முதல் 22 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* 23-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கும். இது முடிந்து 30 நிமிடங்களுக்கு பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
* 22 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். * வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சுழற்சி முறையில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பணி முடிவுற்ற பின்புதான் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும்.
* தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மீண்டும் சரிபார்க்கப்படும்.இவ்வாறு சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கே தொடங்கினாலும், தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்து முதல் சுற்று எண்ணி முடிக்க 9 மணி ஆகி விடும். எனவே, 9.15 மணிக்குத்தான் யார் முந்துகிறார்கள் என்பதே தெரிய வரும்.