தமிழக தலைவர்களுக்கு இதே மரியாதை கிடைக்குமா?
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் பா.ஜ.க. மூன்றாவது அணியை ஏற்படுத்தியது. அதி்ல், தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன. அந்த தேர்தலில் பா.ம.க.வின் அன்புமணியும், பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், வடமாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவைப்படாத அளவுக்கு மெஜாரிட்டி கிடைத்தது.
அப்போது பிரதமராக மோடி பதவியேற்ற போது அந்த விழாவில் தமிழகத் தலைவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, கேப்டன்ஜி, பிரேமலதாஜி என்று பாசமாக அழைத்த மோடி பிரதமராகும் முன்பே மாறிப் போனார். பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் கைகுலுக்கி வரவேற்று அற்புதமாக பதவியேற்பு விழாவை நடத்தினார் மோடி.
அதே சமயம், பதவியேற்பு விழாவில் தங்களை இப்படி ஓரங்கட்டி விட்டார்களே அப்போதே விஜயகாந்த் வெறுத்து போனார். அது மட்டுமல்ல, வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டதும் அவர்களை நோக வைத்தது.
அதே போல், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பியிருந்த அன்புமணி ராமதாசும் ஏமாந்து போனார். ஒரே ஆளாக வென்று சென்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இணையமைச்சர் பதவிதான் கிடைத்தது.
ஆனால், இந்த முறை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, அந்த பழைய கசப்புகளை கூட்டணி தலைவர்கள் மறந்து புதிய நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. அதனால்தான், தேர்தல் முடிந்ததும் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் முதல் கூட்டத்திலேயே எல்லா தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
அதனால், தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா, சுதீஷ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. அன்புமணி மற்றும் சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் அமித்ஷாவின் டின்னர் விருந்தில் பங்கேற்றனர். அனைவரையும் மோடி வரவேற்று உபசரித்துள்ளார்.
அதே சமயம், பா.ஜ.க.வுக்கு கருத்து கணிப்புகளின்படி அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டால், அதிலும் 300 இடங்கள் கிடைத்து விட்டால் பதவியேற்பு விழாவில் தமிழக தலைவர்களுக்கு இப்போது கிடதை்த உபசரிப்பு இருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. காரணம், கடந்த முறை பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆனால், இம்முறை பெரிய வெற்றி கிடைத்தால் பதவியேற்பு விழாவை வாரணாசியில் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. எனவே, அப்படி வாரணாசியில் பிரம்மாண்டமாக விழா நடத்தப்பட்டால், அப்போது தமிழகத்தில் கூட்டணி தலைவர்களுக்கும் அழைப்பு தரப்படலாம். அப்படி இல்லாமல் வழக்கம் போல் ராஷ்டிரபதி பவனில் நடத்தப்பட்டால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சிலருக்கு மட்டுமே அழைப்பு கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அது எப்படிப் போனாலும் சரி, தமிழக கோரிக்கைகளை இந்த முறையாவது பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளும் என்று நம்பிக்கை வைக்கலாம்!