ஊசலாட்டத்தில் நவீன் பட்நாயக், கே.சி.ஆர்., ஜெகன் மோகன்...! சரத்பவார் வலையில் வீழ்வார்களா..?
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் தான் இடைவெளி உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்கப் போவது பாஜகவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? அல்லது பாஜக அல்லாத 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? என்பது போன்ற விவாதங்கள் சூடாகிக் கிடக்கிறது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து பலம் காட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர்., ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பது இன்னும் ஊசலாட்டமாகவே உள்ளது. இவர்களை பாஜக பக்கம் போக விட்டு விடக் கூடாது என்ற முடிவுடன் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சரத் பவார் . இப்போது தனிக் கட்சி ஆரம்பித்தாலும் காங்கிரசுடன் கூட்டணி கண்டிருக்கிறார். அரசியல் சித்து வேலைகளில் கில்லாடியான சரத் பவார், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்.கருத்துக் கணிப்புகள் கூறுவது போல் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது சரத்பவாரின் கணக்கு .இதனால் பாஜக பக்கம் மாநிலக் கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைக்க ஆதரவு தந்து விடக் கூடாது என்ற திட்டத்துடன், ஊசலாட்டத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், கே.சி.ஆர் ஆகியோரை வளைக்க வலை வீசியுள்ளாராம் சரத் பவார்.
இந்த முறை ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா வில் இந்த மூவரும் கணிசமான எம்.பி.க்களை பெறுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரு நாட்களாக கே.சி.ஆர்., மற்றும் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் அடுத்தடுத்து தொலைபேசியில் பேசிய சரத் பவார், ஓரளவுக்கு வெற்றியும் கண்டு விட்டாராம். ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே இன்னும் தொடர்பில் சிக்கவில்லை என்றும், அவரையும் பாஜக பக்கம் செல்ல விடாமல் தடுத்து விடலாம் என்றும் நம்பிக்கையுடன் உள்ளாராம் சரத் பவார்.
200 தொகுதிகள் வரை காங்கிரஸ் ஜெயித்து விட்டால் ராகுலை பிரதமராக்குவது, இல்லாவிட்டால் காங்கிரஸ் தயவில் மம்தா, மாயாவதி, கே.சி.ஆர்., சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவரை பிரதமராக்குவது என்பது தான் சரத் பவாரின் இப்போதைய பிளான் என்று கூறப்படுகிறது. இந்தக் கணக்குகளுக்கெல்லாம் நாளை விடை தெரிந்துவிடும்.