கர்நாடகாவுக்குள் நுழைந்தது கோதண்டராமர் சிலை!

கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவண்ணாமலை அருகே பெரிய பாறாங்கல் தேர்வு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கபட்டது. அந்த சிலை நீண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

அந்த பெரிய லாரி செல்லும் சாலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொண்டு சென்றாலும் பல்வேறு இடங்களில் லாரி டயர் வெடிப்பு, சில இடங்களில் புதிய மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற காரணங்களால் சிலை பயணம் தடைபட்டது. சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் 3 மாதங்களாக சிலை கொண்டு செல்லப்பட்ட லாரி நிறுத்தப்பட்டது.

கடைசியாக, இம்மாதம் 3-ம் தேதி, அங்கிருந்து சிலையுடன் லாரி பெங்களூருவுக்க புறப்பட்டது. ஆனால், லாரி டயர்கள் மீண்டும் பஞ்சரானதால், இம்மிடிநாயக்கனபள்ளியில் நிறுத்தப்பட்டது. அதன்பின்பும், பல இடங்களில் இப்படி நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

கடைசியாக, ஓசூருக்கு முன்பாக பேரண்டபள்ளியில் லாரி நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் ஆற்றை லாரி கடந்து செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டது. பாலத்தில் லாரி செல்லமுடியாததால் இந்த சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சாலை போடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன்பின், ஆற்றில் குழாய்கள் அமைத்து அதன் வழியாக தண்ணீரை திருப்பி விட்டனர். பின்னர், அந்த குழாய்கள் மீது மண்ணை கொட்டி, புதிய மண்சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை வழியாக லாரி ஆற்றை கடந்துள்ளது. கடந்த 13 நாட்களாக பேரண்டபள்ளியிலேயே நிறுத்தப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை ஒரு வழியாக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா எல்லைக்குள் கோதண்டராமர் சிலை நுழைந்து விட்டது.

More News >>