அ.தி.மு.க.வை விட்டு போக மாட்டேன்! தோப்பு வெங்கடாசலம் உறுதி!
அ.தி.மு.க.வை விட்டு விலகி, வேறு கட்சிக்கு போகவே மாட்டேன் என்று தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது.
மேலும், கருப்பணனை நீக்கி விட்டு, தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடிக்கு தோப்பு வெங்கடாசலம் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மே 20ம் தேதி மாலை சேலத்திற்கு சென்ற தோப்பு வெங்கடாசலம், அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை அளித்தார். மாலை 5 மணி முதல் ஒன்றரை மணி நேரம் அவரிடம் முதல்வர் எடப்பாடி சமரசம் பேசினார். அதன்பின், நிருபர்களிடம் கூறுகையில், சொந்த காரணங்களால் கட்சிப் பதவியை துறந்ததாக கூறினார். ஆனாலும், ஜெயலலிதா இருந்த போது தனக்கு எவ்வளவு பொறுப்பு தரப்பட்டது என்பதை பட்டியலிட்டார். அதன் மூலம், அவர் மீண்டும் மாவட்டச் செயலாளர், மந்திரி பதவியை எதிர்பார்க்கிறார் என்பது மறைமுகமாக தெரிந்தது.
இதன்பின்பு, தேர்தல் முடிவு வந்ததும் அவர் தி.மு.க.வுக்கு போய் விடுவார், டி.டி.வி. தினகரன் கட்சிக்கு போய் விடுவார் என்றெல்லாம் தகவல்கள் பரபரக்கத் தொடங்கினர். இதையடுத்து, இன்று தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்பு, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘நான் அ.தி.மு.க.வை விட்டு விலகி வேறு கட்சிக்கு போகப் போவதாக வதந்தி பரப்பப்படுகிறது. நான் எப்போதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். முதல்வரும், துணை முதல்வரும் எனக்கு உரிய மரியாதை அளித்து வருகிறார்கள் ’’ என்று தெரிவித்தார்.