124 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. அணியை வீழ்த்தி கம்பீர நடைபோடும் கோலி அண்ட் கோ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே நடந்து முடிந்திருந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கேப் டவுனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 159 பந்துகளில் [12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 160 ரன்கள் குவித்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 76 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்கமே அதிர்ச்சிகரமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா 1 ரன்னிலேயே எல்.பி.டபள்யூ முறையில் வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் மார்க்ரம் மற்றும் ஜே.பி.டுமினி இணை பொறுப்புடன் ஆடியது. இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது.
பின்னர் மார்க்ரம் விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. கிளாசன் 6, அரைச்சதம் விளாசிய டுமினி 51 ரன்கள், டேவிட் மில்லர் 25, ஷோண்டா 17, கிறிஸ் மோரிஸ் 14 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், இந்திய அணி 124 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் சுழல் கூட்டணி அபாரமாக பந்துவீசியது. யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.