சீமான், கமல் கட்சி பரவாயில்லை... காணாமல் போன டிடிவி தினகரனின் அமமுக!

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இணையாக மாற்று சக்தியாக உருவெடுப்பார் டிடிவி தினகரன் என்ற ஒரு தோற்றத்தை அமமுக ஏற்படுத்தியது. ஆனால் பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்று தினகரனின் கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுக, திமுகவுக்கு போட்டியாக கெத்தாக தமிழகம் முழுவதும் வலம் வந்தவர் டிடிவி தினகரன். அதிமுக வாக்குகளில் பெரும் பகுதியைப் பிரிக்கப் போகிறார்... கணிசமான தொகுதிகளை கைப்பற்றப் போகிறார்.. என்றெல்லாம் அக்கட்சியினர் பிரம்மாண்ட தோற்றத்தைக் காட்டினர். கடைசியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அது வெறும் மாயத்தோற்றம் என்றாகிவிட்டது.

ஒரு தொகுதிகளில் கூட தன் பலத்தை நி௹பிக்க முடியாத அமமுக, இடைத்தேர்தல் நடைபெற்ற சில தொகுதிகளில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்று 3-ம் இடத்தை பெற்றுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைக் காட்டிலும் மோசமான வாக்குகளைப் பெற்று பரிதாப நிலைக்கு அமமுக தள்ளப்பட்டு அக்கட்சி காணாமலே போய் விட்டது.

அமமுகவின் இந்தப் பரிதாபமான நிலைமை அதிமுக தரப்புக்கு பெருத்த சந்தோசத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் தேர்தல் முடியட்டும்..எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்... உண்மையான அதிமுக நாங்கள் தான் என்று பேச்சுக்கு பேச்சு கூறி பூச்சாண்டி காட்டி வந்தார் டிடிவி தினகரன் .ஆனால் அந்தச் சவடால் பொய்த்துப் போனதில் அதிமுகவுக்கு பெருத்த நிம்மதியை கொடுத்துள்ளது.

More News >>