மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்... மோடிக்கு வாழ்த்துக்கள்...! ராகுல் காந்தி பேட்டி

மக்களவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மக்கள்தான் மன்னர்கள்... அவர்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன் என்றும், வெற்றி பெற்ற மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் தாண்டி அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் அரியணையில் அமர உள்ளார். பிரதமராக வருவார் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது குடும்பத்தின் பாரம்பர்யமான அமேதி தொகுதியிலேயே தோல்வி கண்டதுடன், காங்கிரசும் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தான் இந்நாட்டின் மன்னர்கள். மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன். பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இராணிக்குக்கும் வாழ்த்துக்கள்.

இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு நாங்கள் கடும் போட்டியாக இருந்தோம். ஆனாலும் மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை. தோல்விக்கான காரணத்தையும் இந்த நேரத்தில் ஆராய விரும்பவில்லை.

தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.தேர்தல் முடிவுகளைக் கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தொடர்ந்து போரிட்டு வெல்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

More News >>