வெற்றி தோல்வி சகஜம்... மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்..! டிடிவி தினகரன் கருத்து!
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி,தோல்வி என்பது இயல்பானது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத அமமுக, எதிர்பார்த்த வாக்குகளையும் பெறாமல் காணாமலே போய் விட்டது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட குறைவான இடங்களையே பெற்று, அதிமுகவினரின் ஏளனத்துக்கும் ஆளாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தினகரன்,எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என்று பதிவிட்டுள்ளார்.