வயதானத் தம்பதியருக்கு வந்து குவியும் பரிசுகள்: யார் அனுப்புவது எனத் தெரியாமல் பரிதவிப்பு
வயதானத் தம்பதியருக்கு தொடர்ந்து வந்து குவியும் பரிசுப் பொருள்களால் அத்தம்பதியினர் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் மைக்- கெல்லி தம்பதியினருக்கு சுமார் 70 வயது இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன் எந்தவித உறவுகளும் இன்றி வாழும் இத்தம்பதியினருக்கு அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலமாக ஒரு சுழல் காத்தாடி பார்சலில் வந்தது. பார்சலை கணவர் ஆர்டர் செய்திருக்கக்கூடும் என்றெண்ணி மனைவி கெல்லியும் வாங்கி வைத்துவிட்டார். ஆனால் அந்தப் பொருளைக் கணவர் மைக் ஆர்டர் செய்யவில்லை என்பதை அறிந்து குழப்பமாயினர். நாளடைவில் இச்சம்பவம் மறந்து போக மீண்டும் ஒரு பார்சல் அமேசானிலிருந்தே வந்தது.
இதேபோல் அனுப்புநர் பெயர் இல்லாத பார்சல்கள் அமேசான் மூலம் வருவதும் தம்பதிகள் குழப்பமடைவதும் தொடர் கதையானது. வருகிற அத்தனைப் பொருள்களும் விலை அதிகமுள்ள சந்தையின் சமீபத்திய வரவுகளான எலெக்ட்ரானிக் சாதனங்கள். இதுகுறித்து அமேசான் நிறுவனத்திடமும் புகார் அளித்தனர்.
அமேசான் நிறுவனமும் இதுகுறித்து ஆராய்ந்த போது இது அமேசான் நிறுவனத் தொடர்பில்லாமல் யாராவது டெலிவரி மட்டும் செய்துபோகிறார்களா என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகின்றனர். எது எப்படியோ, மைக்- கெல்லி தம்பதியினருக்கு மட்டும் இந்த இலவசப் பரிசுப் பொருள்கள் பெரும் தலைவலியாகவே உள்ளதாம். தங்களுக்குப் பயனில்லாதப் பல பொருள்களும் வீடு நிறைய இருப்பதால் அவை அனைத்தையும் விற்றுவிடும் முடிவில் இருக்கிறார்களாம்.
நம்ம ஊரில் யாரும் இப்படி அனுப்ப ஆள் இல்லாம போச்சே? என வேதனைப்படுவோருக்கு கம்பெனி பொறுப்பல்ல!