மொத்தமே 52 இடங்கள் தான்... இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது காங்கிரஸ்..!
மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமே 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசால் கடந்த தேர்தலைப் போல், இந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் ஒரு கட்சி 10-ல் ஒரு பங்கு பெற்றி பெற்றால் மட்டுமே அக்கட்சியின் எம்.பி.க்கள் குழுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் 55 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியவில்லை. கடந்த 2014 தேர்தலிலும் 44 இடங்களில் மட்டுமே காங்கிரள் வெற்றி பெற்று இதே போன்ற அவலத்துக்கு ஆளானது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் துடைத்தெறியப் பட்டுள்ளது. 80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் ஒண்ணே ஒன்று என்று சோனியா காந்தி மட்டுமே வென்ற நிலையில், இங்கு அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியும் தோல்வியைத் தழுவி விட்டார். கடந்த முறை போல் இம்முறையும் தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்கத் தவறிவிட்டது காங்கிரஸ்.
கூட்டணி வைத்த பீகார், மகராஷ்டிரா, கர்நாடகாவில் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரசும் மண்ணைக் கவ்வி விட்டது. அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் திமுகவுடன் வைத்த கூட்டணி மட்டுமே காங்கிரசுக்கு கைகொடுத்துள்ளது.தமிழகத்தில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் தேனி தவிர்த்து 8 தொகுதிகளில் திமுக தயவில் காங்கிரசுக்கு அபார வெற்றி கிட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.