திருமாவளவனை கடைசி வரை கதற விட்ட சிதம்பரம் தொகுதி.. 3, 219 ஓட்டில் வெற்றி
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று எண்ணிக்கையிலேயே 35 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிய வந்து விட்டது. ஆனால் முன்னுக்குப் பின் இழுபறியை ஏற்படுத்தியது தேனி, தருமபுரி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் தான். இதிலும் முதல் சில சுற்று இழுபறிக்குப் பின், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி இறுதியில் வெற்றி அடைந்து விட்டார்.
தருமபுரி தொகுதியிலும் முதலில் முன்னிலை பெற்ற பாமகவின் அன்புமணி ராமதாஸ் கடைசிக் கட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பின் தங்கி திமுக வேட்பாளரிடம் தோற்றுவிட்டார்.
இதில் கடைசி வரை இழுபறியாகி இறுதிச் சுற்றில் வெற்றியை தீர்மானித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி தான். இங்கு ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை மாறி, மாறியே வந்தது. இதனால் திருமாவளவனின் வெற்றி சந்தேகமாகவே மாறி, திமுக கூட்டணியினரை கதிகலங்கச் செய்து விட்டது. கடைசி 2 சுற்றுகள் பாக்கி இருந்த நிலையில், திருமாவளவன் 450 ஓட்டுகள் பின் தங்கி இருந்தார். அடுத்த சுற்று திருமாவளவனுக்கு கைகொடுக்க 3500 ஓட்டு முன்னிலை பெற்றார். கடைசிச் சுற்றில் எண்ண வேண்டியது 6500 வாக்குகள் மட்டுமே என்ற நிலையில் அதிமுக, திமுக கூட்டணி ஏஜண்டுகள் இடையே பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. கண்கொத்திப் பாம்பாக இரு தரப்பினரும் ஓட்டு எண்ணிக்கையை கண்காணித்தனர்.
இந்தச் சுற்றில் வாக்கு வித்தியாசம் திருமாவளவனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல், கடைசியில் 3,129 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்த நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது என்றே கூறலாம்.
சிதம்பரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரம் :
தொல் திருமாவளவன் (விசிக) - 5,00,021
சந்திரசேகர் (அதிமுக) - 4,97,10
3219 வாக்கு வித்தியாசத்தில் விசி கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார். திருமாவளவன் வெற்றி பெற்றார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அதிகாலையில் தான் வெளியானது.
கடந்த 2016 சட்டசபை பொதுத் தேர்தலில், இதே சிதம்பரம் மக்களவைக்கு உட்பட்ட காட்டுமன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட போதும், வாக்கு எண்ணிக்கையில் கடைசிச் சுற்று வரை இமுபறியாகி கடைசியில் 84 வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். இம்முறை குறைந்த வித்தியாசத்தில் கரை சேர்ந்து விட்டார்.