வாக்குப்பதிவு எந்திரங்களில மோசடி செய்து பா.ஜ.க. வென்றுள்ளது! மாயாவதி குற்றச்சாட்டு!
‘‘நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது’’ என்று மாயாவதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அணி எதிர்பார்த்தற்கும் 350 இடங்களை கைப்பற்றியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணி 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த அணிதான் அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50க்கும் மேல் கைப்பற்றும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், படுதோல்வியை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘பா.ஜ.க.வினர் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். அதனால்தான், தேர்தல் கமிஷனும், பா.ஜ.க.வும் கடைசி வரை ஓட்டுச்சீட்டு முறையை கடுமையாக எதிர்த்திருக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது. இந்த முடிவுகளுக்குப் பிறகு நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய் விட்டது. மக்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கை இனிமேல் போய் விடும்’’ என்று கூறியிருக்கிறார்.