மத்திய அமைச்சர் பதவிக்கு குறி.! ஓபிஎஸ் மகனுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார்.
தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனின் வெற்றியை நம்ப முடியாமல் அதிமுகவினரே இன்னும் சந்தேகக் கண்கொண்டு தான் பார்க்கின்றனர். ஆனால் இந்த வெற்றியை சாத்தியமாக்க ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்ட யுக்திகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை நாடறியும்.
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பிருந்தே தேனி தொகுதியில் தகிடு தத்தங்களை ஆரம்பித்துவிட்டது ஓ பிஎஸ் தரப்பு எனலாம். வாரி இறைத்த பணம் கொஞ்ச நஞ்சமில்லை. தமிழகத்திலேயே மக்களவைத் தொகுதி முழுமைக்கும் வாக்குக்கு ரூ 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அள்ளி இறைக்கப்பட்டது தேனியில் மட்டும் தான். அது மட்டுமின்றி தன்னுடைய தீவிர விசுவாசத்தால் பிரதமர் மோடியையே தேனிக்கு வரவழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தார் ஓபிஎஸ்.
தேர்தல் முடிந்த கையோடு குடும்பத்துடன் வாரணாசி சென்று முகாமிட்ட ஓபிஎஸ்., அங்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் தன் மகன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று சரணாகதி அடைந்தார்.
மேலும் வாரணாசியில் காவி வேட்டி, ருத்ராட்ச மாலை அணிந்து கோயில், கோயிலாக கும்பிடு போட்ட ஓபிஎஸ், அங்கு சிறப்பு யாகங்கள் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. மகனின் வெற்றிக்காக இவ்வளவு மெனக்கெட்டார் ஓபிஎஸ். அதற்கு பலனாக முக்கால் ஏறத்தாழ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியும் கிட்டி விட்டது.
அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் தேனி ஒரு தொகுதி மட்டுமே வெற்றியை கொடுத்துள்ளது. கடந்த முறை பாஜகவில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியானார். இம்முறை அவர் தோற்று விட்டார். இதனால் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு தமிழக கோட்டாவில் அமைச்சர் பதவியை பெற்று விடலாம் என்பது ஓபிஎஸ் தரப்பின் திட்டமாக உள்ளது. மத்தியில் 300 தொகுதிகளுக்கும் மேல் சாதனை வெற்றி பெற்று தனித்தே ஆட்சியமைக்கும் பாஜக, இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்குமா? என்பது சந்தேகம் தான்.
ஆனால் பிரதமர் மோடி, மற்றும் அமித் ஷாவிடம் தனக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கால், தேர்தலில் எப்படி வெற்றி கிட்டியதோ, அதேபோல் மத்திய அமைச்சர் பதவியை ஓபிஎஸ் தனது மகனுக்கு எப்படியாவது வாங்கி விடுவார் என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் என்ற வகையில் அமைச்சர் பதவி, அதுவும் முக்கிய இலாகாவை ஓபிஎஸ் மகனுக்கு பாஜக ஒதுக்கினாலும் ஆச்சர்யமில்லை என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் துக்கு ஜாக்பாட் அடிக்குமா? என்பது ஓரிரு நாளில் தெரியத்தான் போகிறது.