மக்கள் வாக்கு அளித்தது அதிமுக ஆட்சிக்கு எதிராகத்தான்! கொ.ம.தே.க. ஈஸ்வரன் பேட்டி!!
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கொங்கு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சி சார்பில் சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் வெற்றி பெற்ற வேட்பாளருடன் சென்று ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றோம். தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஸ்டாலின்தான். அவருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். மக்கள் அளித்துள்ள வாக்குகள், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகள்தான். அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.