அரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. அணியில் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று தேனியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் அவர் ஏதோ தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றுள்ளார் என்ற ரீதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். அ.ம.மு.க.வுக்கு சில எந்திரங்களி்ல ஜீரோ காட்டியது, 35 எந்திரங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சந்தேகத்திற்கிடமான வகையி்ல் கொண்டு சென்றது என்று அதற்கு பல காரணங்களும் சொல்லப்பட்டன.
இந்நிலையில், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் போன்ற அனைத்து கட்சிகளும் நூறு சதவீதம் தோற்றுப் போனதால், சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கேலி செய்து ஏராளமான விமர்சனங்கள், மீம்ஸ்கள் பரவி வருகின்றன. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ‘மோடி ஆட்சிக்கு மதிப்பெண் போட ஜீரோவுக்கு கீழே எதுவும் இல்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால், தேர்தலில் மோடி தலைமையில் வளர்ச்சிக்கான அரசு அமைய ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்.
அதே போல், தேமுதிக இந்த பக்கமும், அந்த பக்கமுமாக தி.மு.க, அ.தி.மு.க. அணிகளில் வெளிப்படையாக பேரம் பேசினர். ஒரு தேர்தலில் ஒரு கட்சிக்கு விரோதமாக இருந்து விட்டு, அடுத்த தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் கூட மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நான்கு நாள் முன்பு படுகேவலமாக விமர்சித்து விட்டு, அதே நபர்களுடன் ஓட்டு கேட்டு வந்தால், மக்கள் எப்படி ஏற்பார்கள்? அதுவும் இந்தியாவிலேயே புத்திசாலி மக்கள் தமிழக மக்கள். ஒரு கட்சி தப்பு பண்ணினால், அடுத்த தேர்தலில் அந்த கட்சியை துவம்சம் செய்து விடக் கூடியவர்கள். அதனால், தற்போது சமூக வலைதளங்களில் அந்த கடுமையான விமர்சனங்களை காண முடிகிறது.
தமிழகம் வைத்த அரசியல் நீட் தேர்வில் படுதோல்வி அடைந்த போலி டாக்டர்கள் என்று அன்புமணி, தமிழிசை, கிருஷ்ணசாமி ஆகியோரை கிண்டல் செய்திருக்கிறார்கள். ‘இனி நமக்கு இங்கே வேலை இல்லை, வடநாட்டுக்கு போவோம்’ என்று தோற்று போன பா.ஜ.க.வேட்பாளர்களின் படங்களை போட்டு மீம்ஸ் போட்டுள்ளனர். அதே போல், ‘‘அதிகமா ஆசைப்படுற ஆம்பிளையும், அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை’’ என்று படையப்பா படத்தில் ரஜினி சொன்ன வசனத்தை குறிப்பிட்டு, அன்புமணி, பிரேமலதா ஆகியோர் படங்களை போட்டு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். இன்னும் பல மீம்ஸ்கள்!!