தம்பியை தோற்கடித்த அண்ணன்! திமுக வசம் அ.தி.மு.க. கோட்டை!
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், டிடிவிக்கு ஆதரவாக திரும்பியதால் அவரது எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
இங்கு தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் மகாராஜனும், .அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். இதில் திமுக, அதி.மு.க. வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது. ஜெயக்குமார், அ.தி.மு.க. வாக்குகளை பிரிப்பதால், தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால், இதை தி.மு.க.வுக்கு வி்ட்டு விடவே கூடாது என்று அ.தி.மு.க.வினர் கடுமையாக போராடினர்.
ஆனாலும், கடைசியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அண்ணன்தான் வெற்றி பெற்றார். கடந்த 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் 489 ஓட்டுகள் முன்னிலையில் அண்ணன் மகாராஜன் இருந்தார். ஆனால், இரண்டாவது சுற்றில் அண்ணனை பின்னுக்கு தள்ளி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் லோகிராஜன் முன்னனியில் இருந்தார்.
அதன் பின் தம்பியை பின்னுக்கு தள்ளி மீண்டும் அண்ணன் மகாராஜன் தொடர்ந்து முன்னுக்கு வந்ததின் மூலம் இறுதி சுற்றில் திமுக வேட்பாளரான மகாராஜன் 85.241 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளரான லோகிராஜன் 73951 ஓட்டுகளும் அ.ம.மு.க. வேட்பாளரான ஜெயக்குமார் 27788 ஓட்டுகளும் பெற்றனர். திமுக வேட்பாளரான மகாராஜன், தம்பியை விட கூடுலாக 11285 ஓட்டுகளை வாங்கி, தோற்கடித்தார்.