டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்... மீண்டும் பிரதமராக மோடி ஒரு மனதாக தேர்வாகிறார்!
மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 30-ந் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் ஆஜராக வேண்டும் வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் பிரதமராக மோடி, ஒருமனதாக தேர்வாகிறார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் முடிந்தவுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமையை பிரதமர் மோடி முறைப்படி கோருவார் என்று தெரிகிறது.
குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்த பின் பிரதமர் மோடி வரும் 30-ந் தேதி பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோயின் இந்த பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி வரும் 30-ந் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக, அவர் தான் 2-வது முறையாக வெற்றி பெற்ற வாராணசிக்குச் சென்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான குஜராத் மாநிலம் காந்திநகருக்குச் சென்று தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெறவும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த விழாவைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த மோடி விரும்புகிறார். பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுப்பதற்கு மோடி திட்டமிட்டுள்ளார். இதனால், பதவியேற்பு விழாவை அவசர கதியில் நடத்தி முடிக்க அவர் விரும்பவில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
பிரதமராக மோடி பதவியேற்கும் தினத்தன்று முக்கிய அமைச்சர்கள் சிலர் மட்டும் பதவியேற்க உள்ளனர். தற்போதைய அமைச்சரவையில் உள்ள ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலர் புதிய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.