தமிழகத்திற்கு தண்ணீரும் வரும்... தாமரையும் மலர்ந்தே தீரும்...! கே.எஸ்.அழகிரிக்கு தமிழிசை பதிலடி!
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.குளம், குட்டையில் தண்ணீர் இருந்தால் தானே ? தாமரை மலரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்ததற்கு, முதலில் கோதாவரி - காவிரி இணைப்பு மூலம் தண்ணீர் வரும்.. பிறகு தாமரையும் மலரும் என்று டிவீட் செய்து, தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... கடல் நீரிலும் தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கினார். ஆனால் தமிழகத்தில் பாஜகவை மட்டுமின்றி, அதனுடன் கூட்டணி வைத்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் மக்கள் கிளீன் போல்டு செய்து விட்டனர். இதில் தப்பிப் பிழைத்த அதிமுக மட்டும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலரப்போவதில்லை. காவிரியில் தண்ணீர் தர மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் குளம், குட்டைகள் வறண்டுள்ள போது, தண்ணீர் இல்லாமல் தாமரை எப்படி மலரும்? என்று கிண்டல் தொனியில் கூறியிருந்தார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள தமிழிசை, தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு மத்தியில் 60 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் தான் காரணம்.தமிழகம் எங்களுக்கு ஒரு எம்.பியைக் கூட தராத நிலையில், கோதாவரியை காவிரியுடன் இணைப்போம் என்று எங்கள் அமைச்சர் நிதின் கட்கரி நேற்றிரவு அறிவித்துள்ளது ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.
இதனால் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்.தமிழகத்திற்கு தண்ணீர் நிச்சயம் வரும். அப்போது தாமரையும் மலரப்போவது நிச்சயம் என்று தமிழிசை சவுந்திரராஜன் டிவிட்டரில் பதிவிட்டு கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.தமிழிசையின் இந்த டிவீட்டுக்கு, அக்கா, வாயில வடை சுடறத நிறுத்துங்க..., முதல்ல செஞ்சுட்டு வாங்க.. உங்கள சி.எம் ஆகவே ஆக்கிக் காட்டறோம் என்ற ரீதியில் வழக்கம் போல நெட்டி சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.