மீண்டும் உலகம் சுற்றத் தயார்! பிரதமரின் வெளிநாட்டு டூர் விவரம்!
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டில் முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற போது, அந்த விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். அதன்பிறகு, அவர் உலகில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். தன்னை உலகத் தலைவராக உருவாக்கிக் கொண்டார். முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, மோடி உலகையே சுற்றி வருகிறார். வெளிநாட்டு பயணங்களிலேயே அவர் பல கோடிகளை செலவிடுகிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனாலும், மோடி இம்முறை பதவியேற்றதுமே வழக்கம் போல் தனது வெளிநாட்டு பயணங்களை தொடர முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், மோடி இம்முறை பிரதமராக பதவி ஏற்ற பின்பு, ஜூன் 13 ம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதையடுத்து, ஜூன் 28 -ல் ஜப்பான் சென்று 2 நாள் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்பின் நவம்பரில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று தெரிய வந்துள்ளது. இந்த பயண விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் அதற்கு முன்பாக வெளியாகி விட்டது.