தேர்தல் தோல்வி.. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த ராகுல் காந்தி...! காங். தலைவர்கள் ஏற்க மறுப்பு!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி விருப்பம் தெரிவிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் அதை நிராகரித்து விட்டனர். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, கடந்த 2014 தேர்தலில் அடைந்தது போல் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தலைவரான பின் சந்தித்த முதல் மக்களவைப் பொதுத் தேர்தல் இதுவாகும்.

தேர்தலில் அமோக வெற்றியைத் தேடித் தந்து, ராகுல் காந்தி பிரதமராவார் என்ற காங்கிரசாரின் நினைப்பு பலிக்காமல் அக்கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ் சுத்தமாக துடைத்தெறியப் பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கிடைத்த படுதோல்வி அக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட்சியின் இந்தத் தோல்விக்கு தலைவர் என்ற முறையில் முழுப் பொறுப்பையும் ஏற்பதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது.இந்தக் கூட்டத்தில், காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததாகவும், ஒட்டு மொத்த காரியக் கமிட்டி உறுப்பினர்களும் அதை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜி வாலா மறுத்துள்ளார். காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் சுர்ஜி வாலா விளக்கமளித்துள்ளார்.

More News >>