பாபுவுக்கு கடவுள் கொடுத்த தண்டனை! ஜெகன் மோகன் ரெட்டி உருக்கம்!

சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் சரியான தண்டனையை அளித்து விட்டார் என்று ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. மறைந்த காங்கிரஸ் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது. ஜெகன்மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியிருந்ததால், சி.பி.ஐ, வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு என்று எல்லாவற்றையும் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை சந்திரபாபு நாயுடு தன் கட்சிக்கு இழுத்து வந்தார். இதற்கு பிறகு, ஜெகன்மோகன், ஆந்திரா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வந்தார்.

தற்போது நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151 தொகுதிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், வெறும் 23 தொகுதிகளை தெலுங்குதேசம் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதே போல், நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 22 இடங்களையும், தெலுங்குதேசம் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், தனது கட்சியில் வெற்றி பெற்றவர்கள் மத்தியில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:

கெடுதல் செய்பவர்களை கடவுள் தண்டிப்பார் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கிறது. நமது கட்சியில் இருந்து ஒவ்வொருவராக மொத்தம் 23 எம்.எல்.ஏ.க்களை விலை பேசி, சந்திரபாபு தன் பக்கம் இழுத்து கொண்டார். ஆனால், இன்று அதே 23 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ஆண்டவன் அவருக்கு கொடுத்திருக்கிறார்.

அதே போல், நமது கட்சியில் 3 எம்.பி.க்களை ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்துக்காக போராடி இழந்தோம். ஆனால், இன்று சந்திரபாபு கட்சிக்கு வெறும் 3 எம்.பி.க்களை மட்டும் கொடுத்து நமக்கு 22 எம்.பி.க்களை கடவுள் கொடுத்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு கெடுதல் புரிந்தார். அதற்கு கடவுள் சரியான தண்டனை அளித்திருக்கிறார். கடவுளின் ஸ்கிரிப்ட் எத்தனை சரியாக இருக்கிறது, பார்த்தீர்களா? நாம் இந்த தீர்ப்புக்கு தலை வணங்குவோம்.

இவ்வாறு ஜெகன் மோகன் பேசினார்.

More News >>