பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு - 30-ந் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு!
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டுமே 303 இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை பாஜக தலைவர் அமித்ஷா, மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எல்.கே.அத்வானியின் காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார்.
பின்னர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடியை பாஜக தலைவர் அமித் ஷா முன்மொழிந்தார். அதனை பாஜக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், நிதீஷ் குமார், உத்தவ் தாக்கரே, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழிமொழிய, பிரதமர் பதவிக்கு மோடி ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திக்கிறார். அப்போது எம்.பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைக் கூறி ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரவுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.