இதுதாண்டா ஸ்காட்லாந்து போலீஸ்!- உலகத்தரத்துக்கு மீண்டும் ஒரு சான்று

ஸ்காட்லாந்து போலீஸாருக்குக் கிடைத்தப் பரபரப்புப் புகாரால் போலீஸார் ஏமாற்றத்துடன் அலைக்கழிக்கப்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் தங்கள் முதல் கடமை என ஸ்காட்லாந்து காவல்துறையினர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் புலி புகுந்துவிட்டதாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். இரவு நேரம் என்பதால் உடனடியாகத் தயாரான போலீஸார் புகாரளித்த விவசாயியின் நிலத்துக்கு விரைந்தனர். அதே நேரம் போலீஸாரின் ஒரு பிரிவினர் அருகிலுள்ள விலங்குகள் சரணாலயத்துக்குச் சென்று அங்கிருந்து விலங்குகள் ஏதும் தப்பித்துள்ளதா என்பதை உறுதிபடுத்தவும் சென்றனர்.

இந்த நேரத்தில் விவசாயியின் நிலத்தில் சற்று தொலைவில் புலி ஒன்று படுத்திருப்பதை போலீஸார் கண்டனர். அப்புலியைப் பிடிக்கவும், அப்பகுதியினருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் தகுந்த வீரர்களையும், உபகரணங்களையும் போலீஸார் வரவழைத்தனர். புகாரளித்த 45 நிமிடங்களில் பயத்தை உண்டாக்கியப் புலி ஒரு பொம்மை என்பதையும் இருட்டில் விவசாயி பொம்மையை விலங்கு எனக் கண்டு அஞ்சியதையும் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் சிலர் ஸ்காட்லாந்து போலீஸார் பொம்மைப் புலியுடன் 45 நிமிடம் போராடியதாகக் கேலி விமர்சனம் செய்த போது, அப்பகுதியில் காவல்துறை ஆய்வாளர், "அந்த விவசாயி பொய் புகார் அளிக்கவில்லை. ஒரு பயத்தில் தவறானப் புகார் அளித்துவிட்டார். பொதுமக்களின் அச்சத்தை நீக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதே காவல்துறையின் கடமை. ஒரு புகாரை அலட்சியத்துடன் அணுகாமல் தீர விசாரிப்பதில் தவறில்லை" எனக் கூறி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

More News >>