ஒடிசா எம்.பி.க்களில் 33 சதவீதம் பெண்கள்! மகளிர் ராஜ்ஜியம்தான்!
ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் 7 பேர் பெண்கள். நாடாளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே 33% பெண்களை அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஒடிசா!
ஒடிசாவில் நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் அம்மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில், பிஜூ ஜனதா தளம் கட்சியே மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே, 4வது முறையாக நவீன்பட்நாயக் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இன்னொரு சாதனையையும் நவீன் புரிந்துள்ளார். அதாவது, அம்மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் 33% ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 7 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை தனது கட்சி சார்பில் அவர் நிறுத்தினார். அவர்களில் தற்போது 5 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல், பா.ஜ.க.வின் சார்பில் 2 பெண்கள் வென்றுள்ளனர். இதனால், ஒடிசாவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் 7 பேர் பெண்கள். எனவே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஒதுக்கீட்டை அளித்த மாநிலமாக ஒடிசா சாதனை படைத்திருக்கிறது.
பிஜூ ஜனதா தளம் சார்பில் பிரமிளா பிஷோய், சந்திராணி முர்மு, ராஜஸ்ரீ, சர்மிஸ்தா சேத்தி, மஞ்சுளா ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் அபராஜிதா, சங்கீதா ஆகியோரும் எம்.பி.க்களாக வென்றுள்ளனர். ஏற்கனவே ஒடிசாவில் மகளிர் ராஜ்ஜியம்தான். காரணம், நவீன் பட்நாயக்கின் தந்தை காலத்திலேயே உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு நவீன் ஆட்சிக்கு வந்ததும் 2012ம் ஆண்டில் அந்த ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். அதே போல், சட்டமன்றம், நாடளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார்.
அம்மாநிலத்தில் மிஷன் சக்தி என்ற பெயரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பல நலத்திட்டங்களை நவீன் செயல்படுத்தி வருகிறார். அதுவே அவரது தொடர் வெற்றிக்கு கைகொடுத்து வருகிறது.