எம்.பி.யாக மாறிய இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த போலீஸ் டி.எஸ்.பி!
ஆந்திராவில் தேர்தலில் வென்று எம்.பி.யாகி விட்ட இன்ஸ்பெக்டருக்கு அவரது பழைய டி.எஸ்.பி. சல்யூட் அடித்த காட்சி, யூ-டியூப்பில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திராவில் கதிரி பகுதியைச் சேர்ந்தவர் கொரந்தலா மாதவ், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது, ஆட்சியில் இருந்த தெலுங்குதேசம் கட்சியினருக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார். இவருக்கும், தெலுங்குதேசம் முன்னாள் எம்.பி. திவாகர் ரெட்டிக்கும் ஒரு முறை மோதல் ஏற்பட்டது. அப்போது காவல்துறையை கடுமையாக விமர்சித்து திவாகர் ரெட்டி பேசினார். அதற்கு கொரந்தலா மாதவ், ‘‘காவல்துறை கேவலப்படுத்துபவர்களின் நாக்கை அறுப்பேன்’’ என்று பதில் கொடுத்தார். இது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இதன்பின்பு, கொரந்தலா மாதவுக்கு அந்தப் பகுதியில் மக்களிடம் செல்வாக்கு ஏற்பட்டது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்தது. அவர் உடனடியாக அவர் தனது இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அது ஏற்கப்படாத நிலையில், அவரது வேட்புமனுவை நிராகரிப்பதாக தேர்தல் கமிஷன் கூறியது. அதன்பின், மாநில நிர்வாக டிரிபியூனலில் மாதவ் மனு தாக்கல் செய்து, தனது ராஜினாமாவை ஏற்க வைத்தார்.
இதையடுத்து, அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கொரந்தலா மாதவ், தெலுங்குதேசம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்டப்பா நிம்மலாவை ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கொரந்தலா மாதவ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது அவருக்கு டி.எஸ்.பி.யாக மெகபூப் பாஷா பணியாற்றினார். தற்போது சி.ஐ.டி. பிரிவு டி.எஸ்.பியாக இருக்கும் மெகபூப் பாஷாவை எம்.பி.யாகி விட்ட மாதவ் சந்தித்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்து கொண்டனர். இந்த காட்சி யூ-டியூப்பில் வைரலாக பரவியது. டி.எஸ்.பி. தனது பழைய இன்ஸ்பெக்டர் எம்.பி.யாகி விட்டதால், அவருக்கு சல்யூட் அடித்தார் என்று செய்தி பரவியது.
இது குறித்து, மாதவ் கூறுகையில், ‘‘நான்தான் முதலில் டி.எஸ்.பி.க்கு சல்யூட் அடித்தார். அவர் பதிலுக்கு எனக்கு சல்யூட் அடித்தார். இது மரியாதை நிமித்தமாக நடந்த நிகழ்வுதான்’’ என்று பதிலளித்தார்.