குடிசையும், சைக்கிளும் மட்டுமே சொந்தம்.! கோடீஸ்வர வேட்பாளரை தோற்கடித்த பிரம்மச்சாரி..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு ஆச்சர்யங்களும் விநோதங்களும் நடைபெற்றுள்ளன. ஒடிசாவில் ஒரு குடிசை மற்றும் ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரரான 64 வயது பிரம்மச்சாரி ஒருவர், எதிர்த்து நின்ற கோடீஸ்வர வேட்பாளரை தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், பட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலரும் களம் கண்டனர். இவர்களுடன் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஒரு சில சாமான்ய வேட்பாளர்களும் களத்தில் குதித்தனர். அப்படிப்பட்ட சாமான்ய வேட்பாளர்களில் ஒருவர்தான் ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா சாரங்கி. இவர் பாஜகவைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் உள்ள பாலாசோர் தொகுதியில் இவரை நிறுத்தியது பாஜக .64 வயது பிரம்மச்சாரியான இவருக்கு சொந்தமான சொத்து என்றால் ஒரு குடிசை வீடும், சைக்கிளும் மட்டும் தான். சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளவர். இவர் மது , ஊழல், போலீஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாலசூர் மற்றும் மயூர்பான்ச் பகுதி பழங்குடி குழந்தைகள் படிக்க ஏதுவாக அரசுத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை கட்டிக்கொடுக்க வழிவகை செய்தவர். தொடர்ந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இங்கு இவரை எதிர்த்து ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் கோடீஸ்வர வேட்பாளரான ரமீந்தர குமார் போட்டியிட்டார். மற்ற வேட்பாளர்கள் எல்லாம் பணத்தை வாரியிறைத்து பிரச்சாரத்தில் விறுவிறுப்பு காட்ட, எந்தவித பந்தாவும் காட்டாமல் சைக்கிள், ஆட்டோவில் மட்டுமே பிரச்சாரம் செய்தார் பிரதாப் சந்திரா.கடைசியில் 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் கோடீஸ்வர வேட்பாளரான ரமீந்திரகுமாரை தோற்கடித்து இப்போது எம்.பி.யாகவும் ஆகிவிட்டார்.

ஒரு குடிசை வீட்டையும், ஒரு சைக்கிளையும் மட்டுமே சொந்தமாக வைத்துள்ள பிரதாப் சந்திராவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். குடிசை வீட்டில் அமர்ந்துக்கொண்டு ஒரு பையில் சில ஆடைகளை அடுக்கிக்கொண்டு டெல்லி புறப்பட்ட பிரதாப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

More News >>