அமித்ஷா அமைச்சராகிறார்! ஜெட்லிக்கு வாய்ப்பு இல்லை!
பிரதமர் மோடி அமைச்சரவையில் இந்த முறை அமித்ஷா இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அருண்ஜெட்லி உள்பட சில சீனியர்களுக்கு பதவி கிடைக்காது என்றும், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என்றும் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் பதவியேற்கிறது. வரும் 30ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவார்கள் என்ற பரபரப்பு பா.ஜ.க. வட்டாரங்களில் தொற்றிக் கொண்டிருக்கிறது. பலர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மூத்த தலைவர்கள் மூலமாக அமைச்சர் பதவியை பிடிக்க ‘லாபி’ செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன்பிருந்தே பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மட்டுமே எல்லாவற்றிலும் முடிவெடுக்கும் வகையில் கட்சி அவர்கள் இருவரிடமும் சென்று விட்டது. எனவே, அவர்கள் முடிவு செய்பவர்கள் மட்டுமே அமைச்சராக முடியும் என்பதால், மூத்த தலைவர்கள் பலரும் தங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். அதில் அருண்ஜெட்லியும் ஒருவர்.
ஜெட்லிக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் தேர்தலில் பிரச்சாரத்திற்கு போக முடியாமல் தினந்தோறும் ட்விட்டரில் எதிர்க்கட்சிகளை வசைபாடி தனது இருப்பைக் காட்டிக் கொண்டே இருந்தார். ஆனாலும், இந்த முறை அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்றே பா.ஜ.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதே சமயம், பா.ஜ.க. தேசிய தலைவராக உள்ள அமித்ஷா இந்த முறை மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது. மேலும், ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல், நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கும், அமேதியில் ராகுல்காந்தியை வென்ற ஸ்மிருதி இரானிக்கும் முக்கிய பதவிகள் கிடைக்கலாம். மற்றபடி பல பழைய அமைச்சர்கள் மாற்றப்பட்டு, புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இணையமைச்சர் பதவி தரப்படலாம் என்று பேசப்படுகிறது. ஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி தரப்பு, தே.ஜ.கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறாமல் இருந்தால்தான், காவிரிப் பிரச்னை உள்பட பல விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடியும் என்று கருதுகிறது. மேலும், மத்திய அரசில் ஓ.பி.எஸ் கை ஓங்குவதையும் எடப்பாடி தரப்பு விரும்பாது.
எனவே, ஓ.பி.எஸ். மகனுக்கு வாய்ப்பிருக்காது என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ஆரம்பத்தில் தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படாது என்றும், அதன்பின்பு, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட யாருக்காவது ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளித்து அமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதே போல், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி போன்ற கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை போல் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படும் என தெரிகிறது. லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தனக்கு பதிலாக மகன் சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி கேட்டிருக்கிறார். மற்ற கட்சிகளும் அமைச்சர்களை மாற்ற வாய்ப்புள்ளது.