இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி! போரிஸ் ஜான்சன் முன்னிலை!
ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், இங்கிலாந்து நாடு வலிமை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் நினைத்ததால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், இதற்கான வழிமுறைகள் தொடர்பான 'பிரெக்சிட்' தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இது வரை நிறைவேற்ற முடியவில்லை. காரணம், அந்த வழிமுறைகளை எதிர்க்கட்சிகள் ஏற்காததால், அதை நிறைவேற்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு முறையும் தீர்மானம் தோல்வியை சந்தித்தது.
பிரதமரும், ஆளும் கட்சி தலைவருமான தெரசா மேக்கு, கடும் நெருக்கடி எழுந்தது. இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக தெரசா மே அறிவித்தார். பிரதமர் பதவிலிருந்தும், விரைவில் அவர் விலகுவார் என்றும் பேசப்படுகிறது. இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியைப் பிடிக்க, அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
அவர்களில் 2 பெண்கள், 6 ஆண்கள். தற்போது 8 மூத்த தலைவர்களும் தலைவர் பதவிக்கு கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், மைக்கேல் கோ, ஆண்ட்ரியா, ஜெர்மி ஹன்ட், ஸ்டீவர்ட், மட் ஹான்காக், எஸ்தர் மேக் வே உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்தான், பிரதமராக பதவியேற்பார்.
தற்போது பிரதமர் போட்டியில் போரிஸ் ஜான்சன் முன்னணியில் உள்ளதாக இங்கிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.