ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமில்லை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கோடை வெப்பம் தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கிறது. வெயிலின் கொடுமையால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.அடுத்த சில நாட்களுக்கும் வெப்பத்தின் தாக்கும் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போதிய மழையும் பெய்யாததால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் கோடை வெயிலின் கடும் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கேற்றாற்போல் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7-ந் தேதி, ஜூன் 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெவ்வேறு விதமான செய்திகள் பரப்பப்பட்டு அனைவரையும் குழப்பமடையச் செய்துள்ளது.இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறக்கப்படும்.வெப்பத்தின் தாக்கம் காரணமாக திறப்புத் தேதி தள்ளிப்போகும் என்று வரும் செய்திகளில் உண்மை யில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

More News >>